என்னுடைய கவிதைகளைப் புரிய முடியாதவளாகவும் கோபம் கொண்டவளாகவும்
இரண்டாயிரத்து நானூற்றிப் பத்தாவது தடவையும் காதலி இருந்தாள்.
நானும் வழமை போல “எனக்கும்தான்” என்று உண்மையைக் கூறி அவளை
ஆற்றுப்படுத்த விழைந்தேன்.
“என்னுடைய கவிதைகளென
நீயும் நானும் அனைவரும் வாசிப்பவை
நான் ஆகியது என்னைத் தேடியலையும் ஒற்றையடிப்பாதையின் கிளைகளே”
என்றேன்.
(காதலி தன் கூந்தலைக் கலைத்து நிலத்தில் போட்டாள்,
மழையின் சொற்கள் கவிதையில் தெறித்தன)
“கரடு முரடான வனாந்தரத்துக்குள்ளால் வரையப்பட்டிருக்கும்
ஒரு ஏதிலியின் போய்ச்சேருமிடத்துக்கான பாதையின் கடினத்தை
அவன் வேறு யாரிடம் போய் முறையிடுவான் பாவம்”
என்றேன்
(அப்போது காதலி தன் இதழ்களை விரித்தாள்,
காதலின் சொற்கள் கவிதையின் மேல் ஊதா நிறமாகப் படிந்தன)
“அவனைப் போக விடுங்கள்” என்றேன்
(அதற்குக் காதலி இறுக அணைத்துக் கொண்டாள்,
உஷ்ணமான சொற்கள் கவிதையின் குளிர்ந்த இடைவெளிகளை நிரப்பின)
அதைப்பார்த்ததும்
‘உன் கவிதையெனப்படுவது என் மேலுள்ள காதல்தான்’
என்றாள் கர்வமாக
இப்போது நான் புரிந்து விட்டது போல தலையை ஆட்டியது