கைகளும் கடலும் பனியும் நானும்

கைகள்:
கழுத்தோரம் மெல்லக் கீழிறங்கி
ஊசிமுனையென வருடும் ஐந்து சொற்களையும்
ஊர்ந்து போகவிட்டு ரசிக்கும் நின் கவிதை
இந்த அந்திக்குள்ளிருந்து
என்னை விடுவிக்கும்?

கடல்:
கவிதைக்குள்ளிருந்த கடலை எடுத்து
வீசியெறிந்த பின்னிரவிலிருந்து
கடலெனப்படுவது
நினைவிலிருந்து விலகித்
தூரம் போய்விட்ட ஆடு
அதுவே
நுரை நுரையெனப் பிரவாகிக்கும்
‘புதிய இப்போது’ எனக்கு

பனி:
உறைய விடாதிருக்க
நானெறிந்த சொற்களின் மீது
செல்ல அன்பின் திவலைகளைத் தூவும் காலம்
அதுவே என்னை மறைப்பதும்
என் கோபத்தின் செங்கதிர்களை
மூடிவிடும் பனியும்

மணலில் ஓடி விளையாடும்
பிள்ளைச் சொல்லென
குளிர்ந்த இரவின் மீது திரியும் கவிதைமேல்
பிறகு முதலிருந்து விழத்தொடங்கும் அதே பனி

பனியெனப்படுவது
என் கவிதைக்குள் வரையப்பட்ட குளிர்

நான்:
நானெனப்படுவது நின் கைக்குள்
திமிறிக்கொண்டிருக்கும் அந்தியின் செம்மஞ்சள் காலம்