மூன்றாவது சொல்

அகல விரியும் பெருங் கண்கள் இரண்டிலுமிருந்து
காதலின் வேறு பெயர்களை உச்சரிக்கும் சிட்டுக்குருவிகள்
படபடத்துப் பறந்து போகும் சத்தம் முதலாவது சொல்லாகவும்

விட்டுத் தூரம்போய்விட்ட
பேரொளியின் நிழலில்
ஒரு களைத்த தாய் ஆடு போல உறங்கும் நினைவு
இரண்டாவது சொல்லாகவும்

இந்த இரவின் மீது
ஆசீர்வதித்துத் தெளித்துவிடப்பட்ட
இரு துளிச் சொற்களிலும் நானில்லை

நானெனப்படுவது
இரவுகளின் இரகசிய ஓடைகளுக்குள்
நட்சத்திரங்கள் அவசர முத்தங்களைப் பரிமாற உதவும் தூரத்து வெளிச்சம்
அது
நான்கு துண்டுகளாகி
கடலில் விழுந்து கிடந்த நிலவின் கனவை
வரைந்து மடித்துப் பத்திரப்படுத்தப்பட்ட காகிதத்திலிருந்து
வீசிய ஒளி

மூன்றாவதும் நித்தியமானதுமான பெருஞ் சொல்