நித்திய வார்த்தை

மந்திரக் கோலென நீண்டு வளைந்த 

ஒரு மெல்லின எழுத்தினால் 

நீவிவிடப்பட்ட தாபத்திலிருந்து 

இன்னொரு நதி பிரவாகிக்கும் கவிதைக்குள்

உள்நுழைய வழியற்று நிற்கிறது நான்

வேறெதுவும் கலவாத தனி ஒளி விழுந்து 
நீர் மேல் நிறங்களாலான நிழல் 
நதியோ தாண்டிப் போக மனமின்றி 
அதிலேயே தங்கி நின்று கிறங்குகிறது  பின்
கவியுரைக்கிறது.

அப்போது 
கவிதை தன் கரங்களை மெல்ல விரிக்கிறது 

கவிதைக்குள் எப்போதோ
ஆயிரங்கோடி வண்ணத்துப் பூச்சிகளுமென
உயிர் பெற்றிருந்த நான் 

பெய்யெனப் பெய்யும் பெருமழையும் சந்தமுமென
காற்றெங்கும் நின் நித்திய வார்த்தையை
அஹதென்று பாடிக் கரைகிறது. 

இப்போது
வானமெங்கும் நானுமில்லை எதுவுமில்லை
ஆயிரங்கோடி வண்ணத்துப் பூச்சிகளின்
நிறங்களாலான நிழல் முழுதும் 
நீயே நித்திய வார்த்தை