நின் சுடர் பரவும் வெம்மையான பொழுதெனவும்
துளித் துளியென உருகிக் கொண்டிருக்கும் பாவத்தின் சொற்களாகவும்
எழுதிவிடவா இப்போதினை?

அறிந்து கொண்டதன் பாவத்திடம் நினக்கென்று சொற்கள்
எங்ஙணம் இருந்திருக்க நியாயம்?

அணைத்துக் கொள்ளுதலின் எல்லா விவரணங்களையும் நீயே
காற்றில் ஒவ்வொன்றாகப் பரவவிடுகிறாய்,
நான் பொறுக்கியவற்றை என் ஏழைச் சொற்களில் அடைக்கட்டுமா?

நின் தெருக்களில் நான் நினக்கெனவே
கலைந்த வேடங்களுடன் அலைந்து திரியும் கோமாளி,
என்னைப் பார்த்து சிரிக்கிறாய்தானே?

இப்படித்தான் நானெனப்படுவது
அசாதாரணமாக நீ முத்தமிடும் ஒவ்வொரு குளிர்காலையிலும்
புரியாத கேள்விகளில் தன்னை எழுதிவைத்துவிட்டு இறந்து போகும்.

நீயோ
ஒரு குழந்தையின் தலையைத் தடவிய பின்னான
சொற்களற்ற புன்னகையெனச் சுடர்விடுவாய் வழக்கம் போல

அதுவோ அதிகாலையெனப் பெயரிடப்படும்.