நபி

யானைகள் சூழ வந்த பேரிடர் மீது
சொண்டில் சுமந்திருந்த
சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது
சிட்டுக் குருவி

வைக்கோல் நார்களென
மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட
தன் குதூகலத்தை
அதே சொண்டினால்
காற்றின் மேல் எழுதுகிறது.

அப்போது
பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய
காதலனாகிய தெருப்பாடகன்
தன் தோற்கருவி கொண்டு
இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக்
காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான்.

அபூதாலிபின் நரை முழுக்க
பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும்
அந்தச் செய்தி
ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது

“நபி பிறந்தார்”

காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல்
ஒரு பூவென மலர
நிலமெங்கும்
குளிர்ந்த கஸ்தூரி வாசம்