கடல்
வலது தோளில் வந்தமர்ந்தபடி
ஒவ்வொரு முகமாகக் கொத்தி
மணல் மீது ஒன்றின் மேல் ஒன்றாக
அடுக்கத் துவங்குகிறது
மிச்சமிருந்த பின்பகல்
அல்லது
திசைமாறிப் பறந்து வந்த கடல் காகம்

சுவடுகளை விட்டுப் போதல் பற்றி
கடல் ஏன் ஒரு துயர் கவிதைதானும் எழுதுவதில்லை?
நினைவுகளின் பாரத்தில்
அவிழ்ந்து விழும் கோடி நான்களையும்
கடல் என்னதான் செய்யும்?
முத்தத்தின் துவர்ப்பெனப் பிசுபிசுக்கும்
உப்புச் சொல்லொன்று கொண்டு
ஒரு துண்டுக் கடவுள் படைக்குமா?
அதற்கு
காதலின் தொடுவான நிறங்கரைத்து
ஆடை தீட்டுமா?
அதனிடம்
கேட்கப்பட்டேயிராத வரமாகிய
எழுதவே எழுதப்படா இரண்டாம் கவிதையான அதை
சுருட்டி மடித்து மென்று தின்னத் தர வேண்டி
மன்றாடுமா?
எதுவுமில்லா உன்மத்தம் கடல்
கடலெனப்படுவது
காதலியின் ஆழ்மௌனம்
நான் தோற்பது தெரிந்தும் விளையாடும்
விடலைத் தோழி
அதில்
நீட்டியிருக்கும் கால்மயிர்களுக்குள்
திவலை திவலையென அப்பியிருக்கும்
ஒவ்வொரு உப்பு மண்ணும்
நான் எனப்படுவன
இனி
அந்திக் கடலோரம்
ஒளி நிறத்து நண்டொன்று
காற்று வாங்க ஊர்ந்து வரும் பொழுதுகளில்
நானெனப்படுவது
கோடிச் சிறு மணலுமான படர்க்கை