மகளெனும் மாமந்திரச் சொல்

இதே அறைக்குள் கூட உறங்கும்
அழகி பற்றிய
அல்லது
இதுவரை கவிதைக்கென வாய்க்காத
சொற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட
உயிரெழுத்துக்களின் கோர்வை அவள்தானென்பதாக
இக்கவிதை இருக்க முடியும்

கிளைபடர்ந்திருக்கும் நின் சொல்லொன்றின் நிழல் மீது
அவளே இளைப்பாறும் குஞ்சுப் பறவையும்.

அது
கடல் உடுத்திய நின்
தூய சொல்லொன்றின் முத்தத்தில் தாகந்தீர்க்கும்
பின் அதே சொல்லை உரக்கக் கீச்சிடும்
அதில் புதிய முத்தமென இன்னொரு கடல் தோன்றும்

அங்கே
நானுமில்லை, அதன் கர்வமிகு கவிதையுமில்லை
அவளே இந்தப் பேரண்டத்தின் அத்தனை ஆரவாரங்களும் இனி

முன்பு போல சொற்களின்றி
கடலோரம் உலவும் நான்
பிறகு வீடு திரும்பும் வழியில்
எதுவுமற்ற தன் கவிதையை
நூறாயிரமாவது தடவை இப்படி எழுதி முடிக்கும்

மகளே
ஒளியென என் மேல் படந்த
மாமந்திரச் சொல்லே