இன்னமும் தட்டச்சு செய்யப்படாத
விடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள்
செட்டை கழற்றப்பட்ட கவிதை சுருண்டு படுக்கிறது.

வெறும் ஒளியின் மங்கிய வர்ணங்கள் கொண்டு
பின்னிரவிலிருந்து வெளியேறிய பெண்
இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள்

அது என்னைப் பற்றியது

சாயமற்ற தன் உதடுவழி
அவள் தன் பாடலை இப்படித் தொடங்கினாள்
அவனொரு வெள்ளைக் காகிதம்
நான் மைபூசப்பட்ட ஒளி

உஷ்ணமான மெல்லிய தோலிலிருந்து
காதல்  ஒரு தூதுவன் போல இறங்கி வரும் என்று
ஏமாற்றப்பட்டவளின் எளிய மனசாட்சியென
நான் இன்னொருமுறை சுவரில் மோதுகிறது.
பின் முத்தம் கிடைக்கிறது

அந்த இரவு என்னைப்
பெண் என்று பெரிய எழுத்துக்களால் எழுதி
உரத்து வாசித்தவண்ணம் கழிந்து போனது