பூகோவ்ஸ்கி

01.
காதலியின் மேனியை முகர்ந்திருந்த கிறக்கத்தில்
சிந்திய கவிதைகளை நான் பொறுக்கியெடுத்து முடிய
பூகோவ்ஸ்கி களைத்துப் போய் கதிரையில் வந்து விழுந்தான்.

ஒரேயிரவில் நான் அபகரித்த அவனுடைய நூற்றியாறாவது கவிதை அது.

பதிலாக எனது பாதிக் கண்கள் திறந்திருந்த புத்தனின் கவிதையினை
சுருட்டிக் கொடுத்தேன்.
ஒரே மூச்சில் அதை முழுக்கப் புகைத்து முடித்தான்.

கிரீச் கிரீச் சென்று கேட்கும் கதிரைச் சத்தத்தில்
மடியில் நிர்வாணமான காதலியைத் தடவிக் கொடுத்தபடி
அவன் திரும்பவும் அவளில் இசையைச் செய்யத்தொடங்கினான்.

“இன்னொன்றை சுருட்டித் தரட்டுமா” என்று கேட்டேன்

“ஞானம் வெறும் புகைதான்; பறந்து போய்விடும்,
இவளோ மது சுரக்கும் தேன் வதை” என்று கிறங்கிய கண்களுடன்
அவளை அணைத்தபடி உளறினான்.

அப்போது ஞானத்தின் புகை இரவு முழுக்கப் பரவியது.

02.
காலையில்
முகத் தோல் சுருங்கி, கிழவனாகி, தாடி முழுக்க நரைத்து
நான் இறந்து போயிருந்தேன்

என்னுடைய மரண ஊர்வலத்துக்கு கழுத்துப்பட்டி அணிந்து
அதே காதலியுடன் கைகோர்த்தபடி வந்திருக்கிறான் பூகோவ்ஸ்கி.

அவள் அப்போது ஆடை அணிந்திருந்தாள்.

பதறியடித்தபடி எழுந்து அறைக்கு வந்து பார்த்தேன்

கடந்து போன இரவின் இருள் நிரம்பிய அறை முழுதும்
அவன் கவிதைகள் தெறித்திருந்தன;
ஞானமோ அவற்றின் மீது புகை போல படிந்திருந்தது.