எதிர்கொண்டு சுமந்து செல்லப் பாரமான
சொற்களை
வழிமுழுக்கத் தவற விடுகிறது கவிதை
மீதமிருக்கும்
அர்த்தங்களெனப்படும் பூனைக் குட்டிகள்
கண்களை மூடிப் பால்குடித்தவண்ணம்
தாயின் வயிற்றைத் தடவியபடி
படுத்துக்கொள்கின்றன.
கவிதையின் பின்பாதி முழுக்க
சாம்பல் நிற நிழல்
நீண்ட வால் கொண்ட பூனையெனப்படுவதே
கவிதையென அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து
வெறுஞ்சொற்கள் வாழுமிடத்து
எனக்கென்ன வேலையெனக் கோபித்து
தன்னை விடுவித்துத் தூரம் போகப் புறப்படுகிறது
நான்.
விட்டு வெளியேறுதலின் இன்பமென
கவிதை இருக்கிறது அப்போது
ஆயிரம் பகல்களாலும் சுருட்டி முடிக்க முடியாது
அகல விரிந்து கிடக்கும் காலத்தை
எங்ஙணம் எடுத்துச் செல்வதென்றறியாது
இரண்டு ஒளி நாட்களைத் தவறவும் விடுகிறது.
பிறகு
கடுஞ் சொற்களைத் தன் மேல் எறிகிறது.
காலமோ
“எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகும் நீ
எதனை எடுத்துச் செல்ல இன்னமும் நிற்கிறாய் ஏழைக் கவிஞா”
என எக்காளத்துடன் சிரிக்கிறது.
“இன்னமும் எழுதிமுடியாத பெருங் கனவை எடுத்….” முடிய முதலே
கவிஞனற்ற ஒன்றுக்குள்ளிருந்து
நான் திரும்பவும் தோற்றுப் போய் மீண்டும்
அழுகிப்போன பழைய சொற்களுக்குள் விழுந்தது.
கவிஞனின் பூனையோ இன்னமும்
கண்களை மூடியபடியே
பால்முலையை மென்றபடியிருக்கிறது.
பூனையின் கண்களுக்குள் கவிஞன்.