தலைவர் வாழ்ந்த கவிதை
சாகாவரம் பெற்ற மூன்றே மூன்று சொற்களைப் பிடித்துக்கொண்டு
தலைவர் வாழ்ந்த கவிதைக்குள் தட்டுத்தடுமாறி நுழைகிறேன்.
அவரின் சொற்கள் முழுதும் ஞானிகள் வாழ் இருப்பிடத்து இருள் கவிந்து போயிருக்கிறது
பிந்தைய நாட்களில் சிம்மாசனத்துக்கெனப் பயன்பட்ட நான்களின் பலிபீடம்,
மனச்சாட்சிகளின் இரத்தக்கறை தோய்ந்த அழுக்குத் துணிகளால் மூடி வைக்கப்பட்டிருக்கிறது

“யாருமே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாத
பாழ் சூழ் இல்லம் அது” என்பதை மட்டும்
குறிப்பெடுத்துக் கொள்கிறேன்.

தலைவர் தேயத் தேயப் பயன்படுத்திய
‘அல்லாஹு அக்பர்’
‘போராளிகளே புறப்படுங்கள்’
‘மரம்’ ஆகிய அம்மூன்று சொற்களும்
ஒட்டடை படிந்த ஜன்னல்களில் சாகாவரம் பெற்ற வௌவால்களாகித் தலைகீழாகத் தொங்குகின்றன.

(பி. கு:  தலைவரின் வௌவால்களுக்கு வாய் மட்டுமே உண்டு)

இன்னொரு கவிதையின் சொற்கள் சிலவற்றிலிருந்து அங்கே
சிம்மாசனத்தின் மீது புதிதாக இரத்தம் சொட்டிக்கொண்டிருப்பது
என்னைக் கிலி கொள்ளச் செய்கிறது.

எனக்கு உடனே போகவேண்டும்.

வௌவால்களோ என்னைச் சிறகுகளால்
அழுத்திப் பிடித்துக்கொண்டன.
மூன்றில் ஒரு வௌவால் சொன்னது
“தவறு தவறாக பிளேடினால் குஞ்சாமணி அறுக்கப்பட்டு தெருவில் எறியப்பட்ட கௌதம புத்தனின் இரத்தந்தான் அது”
என்று.
தெரியத் தேவையில்லாததைக் கேட்டு நான் சிரித்தேன் ஆழ் சயனத்திலிருக்கும் யாருக்கும்
தூக்கம் கலைந்துவிடுமளவு சத்தமாகச் சிரித்தேன்.
கவிதை முழுதும் படர்ந்திருந்த தலைவரின் வழுக்கையின் ஒளி
என்னை இழுத்து வெளியே எறிந்தது கோபத்தில்.