காலிதின் குதிரை

கிடுகிடுத்து அதிரும்
இந்தப் பின்னிரவின் குளம்பொலியில்
காலிதின் குதிரை மேல்
மோகங்கொண்டு விரைக்கிறது கவிதை

பொழுதுகளின் மீது பதித்துச் செல்லும்
அதன் குளம்பின் வரித்தடங்களுள்
மாவீரனின் கண்ணிலிருந்து சிந்தும்
பெருங்காதல்
மழையெனப் பெய்து நிரம்புகிறது

அப்போது
கோடித்தடங்களுக்குள்ளும் தேங்கும்
நீரின் ஒளிமுகம்
நின் பொருள் நிரம்பிய
நின் மெய் படர்ந்த
நின் பேரின்ப நிறம் பூசிய
காதலியாகிய என்னுடையது

நீ குன் என்றது- நான்
குனிந்து முத்தமிட்டது