அலங்கரிக்கப்படா வெறுஞ்சொற்களென
நான் நிரம்பியிருக்கும் மட்பாத்திரம்
தன் உட்சுவருக்குள்
இந்தக் கரிய அந்தியின் வாசனையைப் பூசி வைக்கிறது
எதிலிருந்தோ பிரிந்த ஒரு குறுந்தெரு
என்னில் வந்து இணையுமாறு பெரும் பாதையென
அகன்று விரிகிற நான்
‘பயணமே தன் போய்ச்சேருமிடம்’ என
அந்த அந்திக்கான வாசனைக் குறிப்பை எழுதி முடிக்கிறது.
அப்போது
சிதைவுற்ற சாளரங்களின் தழும்புகளுக்குள்
ஒளியெனப் பீறிடுகிறது
நின் அழியா நிறங்கொண்ட பெருஞ் சொல்