நான் எனும் பேரின்பக் கவிதை

தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி
தனித்திருக்கும் இரவினால்
குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன
உலர்ந்த அதிகாலையொன்றில்
என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை
மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை
காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய்

குண்டு மணிகள் போல வரிகளுக்குள் உருண்டோடும்
நா ன் ஆகிய இரண்டெழுத்துக்களும்
கண்ணாடியில் ஒரேமுகத்தைக் காட்டியபடி
வெகுநேரம் நிற்கின்றன.

அதுவோ நிலைத்திருக்க முடியாத
நானெனும் வழமைக்கு மாற்றானது
நானென்பது கண்ணாடியின் எழுத்துருக்களுக்குள்
அடைக்கவொண்ணாத பிரம்மாண்டம் ;
முடிவிலிகளின் ராட்சதம் என் பொருள்
எப்போதும் தனித்திருத்தலின் காதலன் நான்

ஆழமான நதியொன்றின் அமைதியான சலனங்களையும்
ஈரலிப்பையும் ஒற்றை முத்தமென இட்டுவிடும்
வரம் வாங்கி வந்த தீராத இரவின் காதலன்

யசோதரா!

காதல் கிறங்கி வழியும் உன் விழித்திரவம் தொட்டு
என்னை இன்னொன்றாக வரைந்தனுப்பு
உன் பழைய காதலால் எப்போதோ நிறந்தீட்டப்பட்ட என் மேனி
அந்திப் பொழுதுகளில்
உறைந்துவிட்ட தேன்போல பிசுபிசுக்கிறது