விட்டு விடுதலையாக முடியாதெனச் சபித்துத் தூக்கியெறியப்பட்ட இரண்டு வார்த்தைகளையும் ஆளுக்கொன்றாக உண்ணத் தொடங்கினோம். காதலி உண்டு முடித்தவுடன் ‘எல்லைகளற்ற காதல்’ என உரு மாறினாள்
01. காதலியின் மேனியை முகர்ந்திருந்த கிறக்கத்தில் சிந்திய கவிதைகளை நான் பொறுக்கியெடுத்து முடிய பூகோவ்ஸ்கி களைத்துப் போய் கதிரையில் வந்து விழுந்தான். ஒரேயிரவில் நான் அபகரித்த அவனுடைய நூற்றியாறாவது கவிதை அது. பதிலாக எனது பாதிக் கண்கள் திறந்திருந்த புத்தனின் கவிதையினை சுருட்டிக் கொடுத்தேன். ஒரே மூச்சில் அதை முழுக்கப் புகைத்து முடித்தான்.
Unfolding the ensuing few lines of solitary, written up on this midnight; words of darkness, horrendous than me were sprinkled
Night is playing, Collaging the papers of loneliness torn into pieces on all over my portrait.
என்னை இன்னொன்றாக்கும் வித்தையை இந்த நள்ளிரவு காட்டித்தர மறுப்பதும், ஒன்றாகத் தொடர்ந்திருக்கும் அவதிக்குள் கிடந்து தவிப்பதுமாக உழலுகிறது நானாகிய பாவம்.
ஒன்று: இல்லாதிருத்தலை நட்டுவைத்து கனவுகளின் நிழலினை அருந்தியபடி உறங்கிப் போனேன். பூப்பூவாக நான் பூத்திருக்கிறது காலையில் -கனவுகளிலிருந்தே மதுவுக்கும் ஒரு முத்தத்தின் வழி போதை தொற்றியிருக்க வேண்டும்-
“…கரடு முரடான சொற்களை அவிழ்த்தெறிந்த அர்த்தங்கள் என்னை அணிந்து கொள்கின்றன…”“..மோகித்த தம் இதழ்களால் அந்தக் காயங்களின் தளும்புகள் மீது தடவித் தருகின்றன…”“..தூய அர்த்தங்களின் கிறக்கத்தால் இப் பின்னிரவில் நான் கிட்டார் இசைக்கிறது”“..கவர்ச்சியான சொற்களை அணியாத வெறும் இரவு என்னை மீண்டும் மீண்டும் சபிக்கிறது?”
என்னிலிருந்து விழும் சொற்கள் உதிர்ந்தேதான் விழுகின்றன என்பதாகவே அதிகம் ஏமாற்றப்படுகிறேன். நானென்பதோ அதிலிருந்து நிர்வாணம் கிடைக்கப்போகிறதென்ற பெருங்கனவில் அல்லது அர்த்தமென்பது வெளிப்படப் போவதான பேராவலில் ஏமாந்தபடியே திரும்பத் திரும்ப சொற்களை அணிந்து கொண்டும் உடுத்திக் கொண்டும் இருக்கிறது.
நின் சுடர் பரவும் வெம்மையான பொழுதெனவும் துளித் துளியென உருகிக் கொண்டிருக்கும் பாவத்தின் சொற்களாகவும் எழுதிவிடவா இப்போதினை? அறிந்து கொண்டதன் பாவத்திடம் நினக்கென்று சொற்கள் எங்ஙணம் இருந்திருக்க நியாயம்?
என்னுடைய கவிதைகளைப் புரிய முடியாதவளாகவும் கோபம் கொண்டவளாகவும் இரண்டாயிரத்து நானூற்றிப் பத்தாவது தடவையும் காதலி இருந்தாள். நானும் வழமை போல “எனக்கும்தான்” என்று உண்மையைக் கூறி அவளை ஆற்றுப்படுத்த விழைந்தேன்.