மழையின் பெருந்துளிகளெனத் தூறியபடியிருக்கும் இந்த முன்னிரவைச் சூழ்ந்திருக்கும் இருளைப் புகையச் செய்து காகிதத்தின் ஓரத்தில் ஒரு படமாக்கி முடிக்கிறேன். படத்தினுள்ளிருந்து நானெனப்படும் ஒளியினுஷ்ணம் ரிதங்களுடன் அசையத்தொடங்குகிறது.
01. இருட்சுவரின் மீதெழுதப்பட்ட பசியெனப்படும் பெருஞ்சொல்லின் மீதேறி இந்த நள்ளிரவு தன் தெருப் பாடலை இசைக்கத் தொடங்குகிறது. நடனமாடலாம் சத்தமாக ஒரு தோற்கருவியை இசைக்கலாம் ஒரு சருகிலையைச் சுருட்டிப் புகைக்கலாம் ஒரு காதல் கவிதையின் கீழுதட்டை மென்றபடி காற்றில் மிதக்கலாம் என
இன்னமும் தட்டச்சு செய்யப்படாத விடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள் செட்டை கழற்றிய கவிதை சுருண்டு படுக்கிறது. வெறும் ஒளியின் மங்கிய வண்ணங்கள் கொண்டு பின்னிரவிலிருந்து வெளியேறிய பெண் இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள் அது என்னைப் பற்றியது
நினைவின் இடது கழுத்தோரம் ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது மேகமூடிய ஒரு குளிர் காலை உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து நிறங்களை உதறித் துறந்தபடி அது மெல்லச் சிறகசைக்கிறது